Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (01.05.2024)


இன்று என் பத்தியில் முதல் விடயத்தில் நான் எதுவும் புதிதாகத் தரப் போவதில்லை.

மறைந்த ஈழவேந்தன் ஐயா பற்றி நேற்று என் பத்தியில் விவரித்திருந்தேன். அது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரமுகர் சின்னையா இரத்தினவடிவேல் நேற்றுக் காலையில் நேரத்தோடு ஒரு செய்தியை - கருத்தை - தொகுத்து அனுப்பியிருந்தார். அதை அப்படியே - எந்த அடித்தல், திருத்தலுமின்றி அப்படியே இங்கு முதலில் தருகிறேன்.

அதற்கு முன்னர் சின்னையா இரத்தினவடிவேல் பற்றி ஒரு சிறிய குறிப்பு. தமது இளமைக் காலம் தொட்டு தமிழரசுக் கட்சி மீது மாறாப் பற்றுக் கொண்ட ஒரு கொள்கையாளன். தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தூணாக விளங்கியவர். கொழும்புக் கிளையின் மிக மூத்த உறுப்பினர் அவர்தான் என்று நினைக்கிறேன். இரகுபதி பாலசிறிதரன், சிங்காரவேலன் போன்றோரும் உளர். கொழும்புக் கிளையின் தலைவராக ஈழவேந்தனும், செயலாளராக உமாமகேஸ்வரனும் (பின்னாளில் புளொட் செயலதிபர்) இருந்த போது அக்கிளையில் உப செயலாளராக இருந்தவர் சின்னையா இரத்தினவடிவேல்.

இப்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கில், இடையீட்டு எதிராளியாக இவர் சமர்ப்பித்த விண்ணப்பம் வழக்கின் அனைத்துத் தரப்புகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது தெரிந்ததே.

இனி அவர் வரைந்த குறிப்பைப் பார்ப்போம்:-

'இரகசியம் - பரகசியம்' என்ற காலைமுரசுப் பத்திரிகைப் பத்தியை இன்று வாசித்தபோது அதில் ஈழவேந்தன் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த இரு விடயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

அப்பழுக்கற்ற தமிழ் உணர்வாளர். இந்த இடத்தில் இப்படிப் பேசுவது சரியா என்றெல்லாம் பார்க்கமாட்டார். தமிழ் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் என்று வரும்போது அவரது அறிவு முழுவதும் ஒரு இடத்திலேயே குவிந்துவிடும். கூட இருப்பது யார், இந்த அவைக்கு இது பொருந்துமா என்ற விடயம் எல்லாம் அழிந்துவிடும். விளாசு விளாசென்று விளாசிவிடுவார். அவரிடம் பேசுவதற்கு அத்தனை விடயங்கள் விரல்நுனியில் இருக்கும். சரளமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பட பட வென வார்த்தைகள் விழும். தமிழ்ச் செல்வன் அவரை காட்டாறு போன்ற உணர்ச்சிப் பெருவெள்ளம் எனக் குறிப்பிட்டமை மிகப் பொருத்தமானதுதான்.

தமிழ் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் என வரும்போது அவரை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்காக எத்தனை அவமதிப்புக்களையும் சந்திக்க அவர் தயார். அத்தகைய அவமதிப்புக்கள், ஏன் உடல்ரீதியான தாக்குதல்களைக் கூடச் சந்தித்த பல வேளைகளில் நான் அவருடன் கூடவே இருந்திருக்கிறேன். ஓர் அமைப்பில் இருந்தபோதும் அவரை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க எவராலும் முடியாது. அவர் எப்போதுமே ஓர் அமைப்பிலிருந்தபடிதான் செயற்பட்டார் என்றபோதும் அந்த அமைப்பின் கட்டுப்பாடா அல்லது தமிழ் உணர்வு விடயமா என்ற கேள்வி எழும்போது அவர் அந்தக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுவிடுவார். அமைப்பல்ல, அதன் நோக்கமும் இலட்சியமுமே முக்கியமானதாகக் கொண்டு செயற்பட்ட அப்பழுக்கற்ற தமிழன்.

அவரது நம்பிக்கை எதன்பாற்பட்டதோ அதன்படி செயற்பட்டவர். அதனாற்றான் 68களிலே வ.நவரத்தினம் நா.உ. கட்சியிலிருந்து விலக்கப்பட்டு சுயாட்சிக் கழகம் என்ற கட்சியைத் தாபித்தபோது அதனுடன் தன்னை இணைத்துக்கொண்டவர். பின்பு கழகம் மக்கள் செல்வாக்கற்று மங்கியதும் தனக்கான தளம் இதுதான் என தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவர். இந்த அடிப்படையில்தான் அவரது தொடர்புகள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனாயினும் சரி, விடுதலைப் புலிகளுடனாயினும் சரி இருந்தது. புலம்பெயர்ந்தபின் நாடுகடந்த தமிழீழம் அமைப்புடனான தொடர்பும் அப்பேற்பட்டதுதான்.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களில் அவர் தலைவர்களுடன் கருத்து முரண்பட்ட சம்பவங்கள் ஏராளம். காசி ஆனந்தன், கோவை மகேசன் ஆகியோருடன் இணைந்து மட்டக்களப்பின் இராசதுரைக்கு எதிராகச் செயற்பட்டவர்களுள் இவரது பங்கு முக்கியமானது. அப்போது அவரது செயற்பாடுகள் பலராலும் விமரிசிக்கப்பட்டன. ஆயினும் அவர் தனக்குச் சரியானது என்று நினைத்துவிட்டால் அதனை எந்த விலைகொடுத்தும் முன்னெடுக்கத் தயங்கமாட்டார். ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்து அவருடன் பயணிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அதற்கான காரணம் அவரது அதீதமான நேர்மை மிக்க தமிழர் உணர்வு என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மை.

1972 ஆம் ஆண்டு. சிறிமாவோ அம்மையாரின் அரசால் புதிய அரசமைப்பு பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அடிக்கடி விவாத அரங்குகளை கொழும்புக் கோட்டையில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ. போரம் என்ற அமைப்பு அதே மண்டபத்தில் நடத்தவது வழக்கம். புதிய அரசமைப்புப் பற்றிய கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஈழவேந்தனின் கவனத்திற்கு வந்தது. அந்த அரசமைப்பின் கர்த்தா கொல்வின் ஆர் டி சில்வா, என்.சண்முகதாசன், பாலா தம்பு போன்ற பல முக்கியஸ்தர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

ஈழவேந்தன் ஏற்பாட்டில் நாம் ஒரு ஐந்தாறு இளைஞர்கள் மண்டபத்திற்குச் சென்றோம். எதிர்ப்புக் கோசம் எழுப்புவது என்பது எமது திட்டம். கொல்வின் ஆர் டி சில்வா பேசும்போது ஒரு கட்டத்தில் 'இனிமேல் கோடீஸ்வரன் போன்றவர்கள் பிரிவி கவுன்சிலுக்கு தமது இனவாத வழக்குகளை எடுத்துச் செல்ல முடியாது' என்று முழங்கினார். அப்போது ஈழவேந்தன், 'இல்லை எமது குரலை எங்கும் தடுத்து நிறுத்த உங்களால் முடியாது' என்று குரலெழுப்பினார். நாமெல்லோரும் அவருடன் சேர்ந்து சத்தமிட்டோம். காவலாளர்கள் வந்து எம்மை வெளியேற்றினார்கள்.

70களில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் பணிமனை போன்றே செயற்பட்ட அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தமை அதற்கான வாய்ப்பை எனக்குத் தநதிருந்தது.

எந்த மேடையில் தோன்றினாலும், 'எனை நன்றாக இறைவன் படைத்தனன் தனை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலர் திருவாசகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவ்வப்போது தேவைப்பட்ட போதெல்லாம் 'சைவமின்றேல் தமிழில்லை, தமிழின்றேல் சைவமில்லை' என்ற அவருக்கு சைவத்தின்மேல் இருந்த ஆழந்த பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வாசகங்களையும் தயங்காது தெரிவித்துவந்தார். அது அவரது தமிழ் உணர்வை எந்த விதத்திலும் பாதிப்படைய இடம் கொடுத்தவருமல்லர்.

இறதி மூச்சுவரை தமிழுணர்வுடனேயே வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்துகொண்ட அண்ணலின் ஆன்மா இறைவன் சந்நிதியில் சாந்தி பெற அனைவரும் பிரார்த்திப்போம்.

- இது இரத்தினவடிவேல் அனுப்பி வைத்த குறிப்பு. ஈழவேந்தன் என்ற மனிதரை புலிகள் ஏன் அத்துணை தூரம் மதித்தார்கள் என்பதற்கான சூக்குமம் இக்குறிப்பில் புதைந்து கிடப்பதாக நான் கருதுகிறேன்.

புலிகளைப் போன்றே தான் வரித்த நிலைப்பாட்டில் அவருக்கிருந்த பற்றுறுதி, திடசங்கற்பம், நீங்காப் பிடிப்பு அவரை உயர்ந்த மனிதராகப் புலிகளிடம் நிச்சயம் அடையாளம் காட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்..!

***

கிளிநொச்சியில் இம்முறையும் வழமை போல மே தினம் - தமிழரசுக் கட்சியின் தானைத் தலைவர் ('குறுநில மன்னர்' என்ற பெயரை இனி விட்டு விடலாமே....) ஏற்பாட்டில்.

இது தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வல்ல. தமிழரசுக் கட்சி நடத்தினாலும், நடத்தா விட்டாலும் நம் தானைத் தலைவர் வழமையாக தம் குறுநிலத்தில் நடத்துவது என்பதால் அதில் குற்றம் ஒன்றும் கூற முடியாது.

ஆனால் வழமைக்கு மாறாக ஒன்று இம்முறை உண்டு.

நிகழ்ச்சி நடப்பது என்னவோ கிளிநொச்சி மாவட்டத்தில்தான். ஆனால், அது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்குள் வருவது.

வழமையாக அந்தத் தேர்தல் மாவட்டத்தில் தமது தமிழரசுக் கட்சியின் ஒரேயொரு சக எம்.பியான சுமந்திரனை மே தின ஆஸ்தான பேச்சாளராக நம் தானைத் தளபதி அழைப்பதும், அவர் தவறாது கலந்து கொண்டு பேசுவதும் ஒழுங்கு.

இம்முறை, மனோ கணேசன், நீதியரசர் விக்னேஸ்வரன் எனப் புற தரப்பார் எல்லோருக்கும் வெற்றிலை வைத்துள்ள நம் தானைத் தலைவர், சுமந்திரனுக்கு ஏனோ அழைப்புக் கொடுக்கவே இல்லை.

நடக்கவிருந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தையும் 'குறூப் அப்செண்ட்' மூலம் வெற்றிகரமாகத் தடுத்து விட்டனர். அக்கூட்டம் நடந்திருந்தால் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ மே தினம் நடந்திருக்கும். அதுக்கும் ஆப்பு வைத்து விட்டமையால் தமிழரசைப் பொறுத்தவரைத் தானைத் தலைவனின் தனித் திருவிழாதான் இம்முறை மேதினத்தில் வடக்கில்...!

you may also like