- by Editor
- 5 months ago
இந்திய நிதி அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து சீனத் தூதுவர் யாழ். விஜயம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வடக்குக்கு விஜயம் செய்கின்றனர். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணம் வரும் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகின்றார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எனவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது மீன்பிடித்துறையைப் பலப்படுத்த 150 கோடி ரூபாவை சீனா மானியமாக வழங்கியிருந்தது.
வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறையில் சீனாவின் பிரசன்னம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் பின்புலத்தில் வடக்கு மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய 150 கோடி ரூபா நிதியை சீனா வழங்கியுள்ளது.
வடக்கில் சீனா கால்பதிப்பதில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ள போதிலும், இந்த விடயத்தில் சீனாவின் முயற்சி தொடர்கின்றது.
வடக்கு, கிழக்கில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடம் இந்தியா தமது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ள போதிலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக மீன்பிடித்துறையை மையமாகக் கொண்டு சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி லென்ஹோங் 2021இல் வடக்கு மாகாணத்துக்கு வந்தமை மற்றும் அங்கு மேற்கொண்டிருந்த செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
சீனப் தூதுவர் மற்றும் குழுவினர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தியதுடன், உள்ளூர் இந்து பாரம்பரியத்தை பின்பற்றி வேட்டி அணிந்து வெறும் மார்போடு நல்லூரில் வழிபட்டனர்.
யாழ்ப்பாணம் மக்களின் பண்பாட்டு நெறிமுறைகளை ஈர்க்கும் முயற்சியாகவே சீனக் குழுவினர் இவ்வாறு செயல்பட்டிருந்தனர்.
இந்தநிலையில்தான் சீனத் தூதுவரின் இரண்டாவது வடக்கு விஜயம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
சீனத் தூதுவர் தலைமையிலான இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோருடன் உத்தியோகபூர்வ சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
சீன அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களைச் சீனத் தூதுவர் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகச் சீனத் தூதரக வட்டாரங்களில் இருந்து அறியவருகின்றது.
இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, அதனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
ஆனால், இந்தியாவின் எதிர்ப்பைக் கண்டு சீனா பின்வாங்கத் தயாராக இல்லை. இந்த இரண்டு மாகாணங்களின் மீன்பிடித் துறையில் மேலும் முதலீடு செய்ய சீனா ஆர்வம் காட்டி வருகின்றது.
அதற்காகவே அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம் செய்திருந்தபோது, “பெல்ட் அண்ட் ரோட்“ திட்டத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறையினரின் நலனுக்காக சீனா 150 கோடி ரூபாவை வழங்கியது.
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் வடக்கில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்விகண்டுள்ளன.
மீன்பிடி நடவடிக்கைகளில் அதிகரித்த சீனப் பிரசன்னம் நிச்சயமாக இந்தியாவின் கவலைகளை மேலும் அதிகரிக்கும். ஆனால், இலங்கை சீனாவின் உதவிகளை எப்போதும் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.
இந்திய நிதி அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்து ஒருசில நாட்களுக்குச் சீனத் தூதுவர் வடக்கு மாகாணத்துக்குச் செல்வது இந்தியாவை மேலும் அதிருப்திக்குள்ளாக்கும்.
திருகோணமலையை இந்தியா குறிவைத்துள்ள நிலையில் வடக்கைக் குறிவைக்க சீனா எதிர்பார்க்கின்றதா என்ற கேள்வியும் சீனாவின் அண்மைய செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
நிச்சயமாக வடக்கு அரசியலில் மற்றும் பொருளாதாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த இந்தியா அனுமதிக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.