Saturday, October 10, 2026

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து


இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடிக்கும் சூழலில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் டில்லி சென்றனர்.

நாட்டின் 77 ஆவது குடியரசு தினவிழா நேற்று முன்தினம் டில்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐரோப்பிய பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிலையில், டில்லியில் நேற்று 16 ஆவது இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

 பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முன்னிலையில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆணையர் மாரோஸ் செஃப்கோவிக் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

பின்னர் டில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணையதலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,

“இந்த ஒப்பந்தம் இந்திய - ஐரோப்பிய உறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணம். சர்வதேச பொருளாதார சூழலில் இந்த ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல. இருதரப்பின் வளமான எதிர்காலத்துக்கான புதிய வரை படம்.

இந்த ஒப்பந்தம், சிறுதொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஐரோப்பிய சந்தைகளை அதிகளவில் அணுகுவதற்கு வழிவகுக்கும்." என்றார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா பேசுகையில், ‘‘இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய்." என்று வர்ணித்தார்.  

you may also like