Friday, October 9, 2026

இசை உலகையே உலுக்கிய பாலியல் சர்ச்சை - பிரபல பிரெஞ்சு நடிகர் பேட்ரிக் புரூயல் கைது


பிரான்ஸைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரும் முன்னணி நடிகருமான Patrick Bruel, 13 பெண்கள் முன்வைத்த பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1980 மற்றும் 1990களில் பிரெஞ்சு பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்த பேட்ரிக் புரூயல், 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

கடந்த 1997, 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில், பேட்ரிக் புரூயல் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று பெண்கள் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, மேலும் பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

விசாரணையில் பங்கேற்ற பெண்கள், தாங்களும் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வாக்குமூலங்கள் வழங்கியதையடுத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பேட்ரிக் புரூயல் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் பிரபல கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் பேட்ரிக் புரூயலின் கைது, அந்நாட்டு இசை மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

you may also like