Friday, October 9, 2026

தப்பியது ஈரான்? தாக்குதல் திட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்ட டிரம்ப்


அமெரிக்கா ஈரான் மீது மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் தலைமையுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிராந்திய நாடுகளின் ஆதரவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

எனினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் வரை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள கடற்படை முற்றுகை தொடரும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்ற நிலையில், ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

சில சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.

you may also like