Saturday, October 10, 2026

ஆஸ்திரேலியாவிற்கு வழங்க வேண்டிய கடனில் கைவைத்த ஹேக்கர்கள் - தீவிர கண்காணிப்பில் IMF


இலங்கை நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்புகள் இணையக் குற்றவாளிகளால் ஊடுருவப்பட்டதன் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை திருடப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவிக்கப்பட்டுள்ளது.

ERD அமைப்புகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்பட்டிருந்ததை உறுதிப்படுத்திய இலங்கை நிதி அமைச்சகத்தின் அறிக்கையைத் தாங்கள் கவனத்தில் எடுத்துள்ளதாக IMF செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த நிதி, ஆஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு IMF உடன் திட்டமொன்றில் இணைந்ததையடுத்து, இலங்கை தனது வரலாற்றிலேயே மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றது. அந்நேரத்தில், சுமார் 46 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், IMF ஆதரவுடன் செயல்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு மறுஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, IMF மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையே பணியாளர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த மறுஆய்வு IMF செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி பெறும் வாய்ப்பு உள்ளது.

மேலும், IMF திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுவதற்கான ஒப்பந்தம் 2023 மார்ச் 20 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

you may also like