Sunday, October 4, 2026

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு - சட்டரீதியாக 'சிறுவன்' என்பது உறுதி - விசாரணைகள் தீவிரம்!


யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் (10) அதிகாலை பொலிஸார் குறித்த வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அது தொடர்பில் 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன என உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

மேலும், உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

you may also like