Thursday, October 29, 2026

அர்னாப் புயலால் ஆந்திராவில் மூவர் மரணம்; தெலுங்கானா, ஒடிசா, ஜார்க்கண்டிலும் பாதிப்பு


அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அர்னாப் புயல் நேற்று நர்சாபூர் - ஏனம் இடையே காலை 8 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,

''அர்னாப் புயல் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவிலும், ஏனத்துக்கு தென்மேற்கே 40 கிலோ மீற்றர் தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கிலோ மீற்றர் தொலைவிலும் கடற்கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீற்றர் வரை இருந்தது. அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்தது’ என தெரிவிக்கப்பட்டது.

புயல் மற்றும் கனமழை காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் மூவர் உயிரிழந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் மரம் விழுந்ததில், கிஷோர் குமார் என்ற 46 வயது நபர் உயிரிழந்தார். விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி மாவட்டங்களில் தலா ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் கரையை கடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. புயல் கரையை கடக்கும் பகுதிகளில் தாழ்வான இடங்களில் 1 முதல் 1.5 மீற்றர் உயரத்துக்கு கடல் நீர் ஊடுருவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

புயல் தற்போது நிலப் பகுதிக்கு நகர்ந்துவிட்டதால், கடல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் கீழே விழுந்துள்ளன. பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 70,900 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 10,450 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டக்கலைப் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

சுமார் 180 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பி வைக்க கோருகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அர்னாப் புயலின் தாக்கம் தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ளது. அங்கு காலை முதல் மழை பெய்து வருகிறது. நான்கு மாவட்டங்களில் 10 மி.மீ மழையும், மற்ற நான்கு மாவட்டங்களில் 2 கிலோமீற்றர் முதல் 10கிலோமீற்றர். வரையிலான மழையும் பதிவாகி உள்ளது. இந்த புயல் கரையை கடந்த பிறகு மிக தீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயல் என்ற நிலைக்கு வலுவிழந்தது.

ஹைதாராபாத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கம்மம், பத்ராத்ரி கொத்தகுடெம், நல்கொண்டா, சூர்யாபேட் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may also like