Saturday, October 10, 2026

அதிரடியாக சரிந்த உலக எண்ணெய் விலை


100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

சந்தை தரவுகளின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 3.55 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் 4.10 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய் 80.78 அமெரிக்க டொலராக விற்பனையாகியுள்ளது.

மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 83.02 அமெரிக்க டொலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மற்றும் போர் சூழ்நிலையால் கடந்த மே மாதத்தில் மசகு எண்ணெய் விலைகள் உச்சநிலையை எட்டியிருந்தன.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக வெளியான தகவல்கள் மற்றும் வதந்திகள் காரணமாக கடந்த சில வாரங்களாக எண்ணெய் விலைகள் படிப்படியாக குறைந்து வந்தன.

இந்நிலையில், சமாதான உடன்படிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவும் ஈரானும் இன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக எண்ணெய் சந்தையில் விலைகள் திடீர் சரிவை சந்தித்துள்ளன.

மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், மசகு எண்ணெய் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

you may also like