Wednesday, October 7, 2026

81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது


முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் ஊடாக முறையான அரசாங்க நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், அதற்கான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொள்ள உதவியதாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) பிற்பகல் 4.55 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

you may also like