- by Editor
- 2 months ago
26 சட்டப்பேரவைகளுக்கு ஏப்ரல் 19 இல் இடைத்தேர்தல்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தமிழகத்தின் விளவங்கோடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் வெற்றிடமாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தை அண்மித்த தொகுதி விளவங்கோடு. இந்தத் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு விஜயதரணி வென்றவர். இவர் சமீபத்தில், பா.ஜ.கவில் இணைந்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார். எனவே, தொகுதி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் திகதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு உட்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழகத்தில் விளவங்கோடு, கர்நாடகாவில் ஷோராப்பூர், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆறு தொகுதிகள், தெலுங்கானா, திரிபுரா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி, மேற்குவங்கத்தில் இரண்டு தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 4 தொகுதிகள், குஜராத்தில் 5 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.