- by Editor
- 1 month ago
22ஆவது திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதியான ஆர்ப்பாட்டத்தையும் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைச் சீரழித்து வருவதாக சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியே எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அதற்கு எதிரான நடவடிக்கைகளையும் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புகளையும் மேலும் வலுப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தனிக்கட்சி ஆட்சிக்கான முயற்சியை தோற்கடிக்க வேண்டும்”
நாடு தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி, தனிக்கட்சி ஆட்சியை உருவாக்குவதற்கும் நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்கு மையப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் இருப்பதற்காக, 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரஜைகள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தாம் கருதும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிப்பதற்காக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், இந்த நடவடிக்கை அரசாங்க மாற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.