Saturday, October 10, 2026

2026 GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்


அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் 12ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விண்ணப்பங்களை நேற்று (22) முதல் எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி வரை இணையவழி முறையில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது பாடசாலை அதிபர் அல்லது பாடசாலைத் தலைவரின் ஊடாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அனுமதி இல்லை என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அதிபர்கள் மற்றும் தனியார் பாடசாலைத் தலைவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக பிரவேசித்து, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027ஆம் ஆண்டு முதன்முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பரீட்சைக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், தனியார் பாடசாலை மாணவர்களின் அனைத்து விபரங்களும் தரவு அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னரே பரீட்சைக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களைச் செலுத்திய பின்னர் புதிய மாணவர்களின் பெயர்களை இணைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆன்லைன் விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியொன்றை பெற்றுக்கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் அல்லது 011 2784537, 011 2786616, 011 2784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

you may also like