Saturday, October 10, 2026

அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக சாவகச்சேரியில் இன்று (12) காலை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி போதுமான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோருதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

you may also like