Thursday, October 8, 2026

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” - சாகர காரியவசம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (21) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள நபர் ஒருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான மின்னஞ்சல்கள் அல்லது ஆவணங்கள் எதிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

4G தொழில்நுட்பத்தை இலங்கைக்குக் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறுகிறார். ஆனால், 2012இல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 4G அறிமுகப்படுத்தப்பட்டு 2015க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. 2018இல் 5G சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி அறியாத ஒரு ஜனாதிபதி இருப்பது கவலையளிக்கிறது. 

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 103 டொலராக இருக்கும் நிலையில், தற்போதைய அரசு 92 பெட்ரோலை ரூ. 399க்கும், டீசலை ரூ. 382க்கும் விற்பனை செய்கிறது.

ஆனால், 2022 மார்ச்சில் கச்சா எண்ணெய் 117 டொலராக உயர்ந்தபோதும், தமது ஆட்சியில் 92 பெட்ரோல் ரூ. 254க்கே வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

பழிவாங்கல் அரசியல் வீழும்: சிச்சியின் ரொக்கெட் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டது போலவும், நாமலின் சட்டத்தரணி பட்ட விசாரணை அறிக்கை மறைக்கப்பட்டு வருவது போலவும், இறுதியில் இந்த எயார்பஸ் குற்றச்சாட்டுகளும் பெலவத்தையிலுள்ள அலுவலகத்தின் மீதே திரும்ப விழும் என அவர் தெரிவித்தார்.

you may also like