Saturday, October 10, 2026

“இலங்கை தெற்காசியாவின் வேகமாக வளர்ந்து வரும் நாடு” என்ற கூற்று தவறானது - உண்மை சரிபார்ப்பு நிறுவனம்


இலங்கை தெற்காசியாவின் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடு என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளதாக வீட்டுவசதி, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி. சரத் வெளியிட்ட கருத்து தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக ‘பெக்ட் கிரசெண்டோ’ (FactCrescendo) என்ற சுயாதீன உண்மை சரிபார்ப்பு இணையதளம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட இலங்கை பொருளாதார ரீதியாக முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். எனினும், உலக வங்கியின் தரவுகள் மற்றும் பொருளாதார குறிகாட்டிகள் இதற்கு மாறான நிலையை காட்டுவதாக குறித்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய வகைப்பாட்டின்படி, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, இலங்கை மீண்டும் “மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடு” (Upper-Middle-Income Country) என்ற வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) 2024ஆம் ஆண்டில் 3,870 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 4,670 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது சுமார் 20.67 சதவீத வளர்ச்சியாகும்.

எனினும், தனிநபர் வருமானத்தின் இந்த அதிகரிப்பு ஒரு நாட்டின் முழுமையான பொருளாதார வளர்ச்சியையோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ முழுமையாக பிரதிபலிக்காது என உலக வங்கி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு தனிநபர் வருமானம் மட்டும் போதுமான அளவுகோல் அல்ல. மாறாக, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Real GDP Growth Rate) முக்கியமான குறிகாட்டியாக கருதப்படுகிறது.

அந்த தரவுகளின் அடிப்படையில், தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியா மற்றும் பூட்டான் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாகவும், பூட்டானின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பதிவு செய்துள்ள 5 சதவீத வளர்ச்சியை உலக வங்கி “மிகவேகமான அபிவிருத்தி” என குறிப்பிடவில்லை என்றும், அது பொருளாதார மீட்சியின் ஒரு பகுதியாகவே கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் வசந்த அத்துகோரள கருத்து தெரிவிக்கையில், அட்லஸ் முறையிலான தனிநபர் தேசிய வருமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தெற்காசியாவில் முன்னிலையில் இருப்பதாக கூறுவது சரியானதாக இருக்கலாம் எனவும், ஆனால் இலங்கை பிராந்தியத்தின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் எனக் கூறுவது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா போன்ற நாடுகளின் அதிக சனத்தொகை காரணமாக தனிநபர் வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டாலும், அந்நாடுகளின் பொருளாதார அளவு மற்றும் வளர்ச்சி வேகம் இலங்கையை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

you may also like