Saturday, October 10, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் - அமெரிக்க முற்றுகைக்கு எதிராக ஈரான் கடும் எச்சரிக்கை


ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் என்று ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை அறிவித்துள்ளது.

மேலும், கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்காக முன்பு ஒதுக்கப்பட்டிருந்த கடல் பாதைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கு முன், ஈரானுடன் ஒருங்கிணைந்து சுங்கக் கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்கு இந்த நீரிணை வழியாக பயணிக்க அனுமதி வழங்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை (17) அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று (18) வெளியிடப்பட்ட ஈரானிய அரச ஊடக அறிக்கையில், இந்தத் தடையை மீறும் எந்தக் கப்பலும் இலக்காகக் கொள்ளப்படும் என கடற்படை கடுமையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில், நேற்று ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் கடலோரப் பகுதிகளில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் குறைந்தது ஒரு கப்பல் ஈரானிய துப்பாக்கிப் படகுகளால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

you may also like