- by Editor
- 2 years ago
ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை
-
- by Editor,
- 6 months ago
- in உலக செய்திகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28ஆம் திகதி தொடங்கிய போர் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.
ஈரானை இலக்காகக் கொண்டு திடீர் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்காவும் இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த தாக்குதல்களின் விளைவாக, தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
போரின் ஆரம்ப நாளிலேயே தனது உச்சத் தலைவரை இழந்ததாகக் கூறப்படும் ஈரான், பின்னர் பல முக்கிய தலைவர்களையும் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில், ஈரான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை திறன்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்பாராத முறையில் ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை திறனை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்காவையும், உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்கா–இங்கிலாந்து கூட்டுப் படைத்தளத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ‘கொரம்சாகர்–4’ வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகள் சேதத்தை ஏற்படுத்தவில்லை எனினும், தாக்குதல் முயற்சியே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு 22 நாடுகள் இணைந்து ஈரானை வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், வளைகுடா பிராந்தியத்தில் ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
தீவிரமடைந்து வரும் இந்த மோதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இந்நாடுகள், கண்ணிவெடிகள், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறும், சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் மதிக்குமாறும் ஈரானை கேட்டுக்கொண்டுள்ளன.