- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (31.12.20230
வயது போய், மூப்பு வந்து, தளர்வு ஆரம்பிக்க... மனிதன் மீண்டும் குழந்தைப் பிள்ளையாகி விடுகின்றான் என்பது பொதுவான கணிப்பு.
அப்படித்தான் தமிழரசு மூத்த தலைவர்களின் நிலைமையும் என்பது என் சந்தேகம். துடிப்புடன் செயற்பட்ட நடிகர் விஜயகாந்த் கடைசி சில வருடங்கள் எப்படியானார், அவரை வைத்து எப்படி அரசியல் செய்தார்கள் என்பவை எல்லாம் நமக்குத் தெரிந்தவைதான்.
தமிழரசுக் கட்சி தொடர்பில் சம்பந்தனின் ஒப்பத்துடன் வழமைக்கு மாறாக, மிக நீண்ட அளவில் வந்துள்ள கடிதம் மற்றும் சம்பந்தனின் பெயரால் கட்சிக்குள் அரங்கேறும் சில செயற்பாடுகள் சம்பந்தனை வைத்து ஒரு தரப்பு இயக்குவதான சந்தேகத்தையே தந்து நிற்கின்றது.
கட்சியின் தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக அடுத்த பத்து நாள்களில் சம்பந்தனை அவரின் இல்லத்தில் நேரில் சந்திக்கும்போது பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடந்தது என்றால் அதை எனக்கு ஏன் அறிவிக்கவில்லை என்றும் சம்பந்தன் கேட்டாராம். நல்ல கேள்விதான். ஏதோ அறிவித்திருந்தால் சம்பந்தன் அந்த கூட்டத்திற்காக திருகோணமலைக்கு வந்திருப்பாரா என்ற மறு கேள்வி வேறு விடயம்.
ஆனால், அதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தை சம்பந்தனின் கொழும்பு வீட்டில் நடத்தத்தானே கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா முயன்றார்...? அதற்காக சம்பந்தனை மாவை சேனாதிராஜா தொடர்பு கொண்ட போது, தான் ஆஸ்பத்திரியில் இருப்பதால் கூட்டத்தைத் தமது வீட்டில் நடத்த முடியாது என்ற பதில்தானே சம்பந்தன் தரப்பிலிருந்து மாவைக்கு வழங்கப்பட்டது...? அப்படி பதில் அனுப்பியவர் இப்போது திருகோணமலைக் கூட்டத்திற்கு ஏன் தம்மை அழைக்கவில்லை என்று கேட்கின்றாராம். ஆனால், கேள்வி நியாயம்தான்.
கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, ட்யூன் பார்த்து பாட்டிசைகின்றார் என்று தகவல்.
மாநாட்டை எப்படியும் திட்டமிட்ட திகதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களுடன் எப்படியும் மாநாட்டை அந்த நாளில் நடத்தி முடித்தாக வேண்டும் என்ற மாதிரிப் பேசுகின்றார். பொதுக்குழுவில் பங்கு பற்றுவதற்கு தொகுதி ரீதியாக நடைபெற்ற தெரிவுகள் பிழை, ஆகவே அவற்றையெல்லாம் திருத்திய பின்னர் ஆறுதலாகக் கட்சி மாநாட்டை நடத்தலாம் என்ற கருத்துடையவர்களுடன் அந்த ட்யூனில் கதைக்கிறார்.
அதனால்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்றுவிடுவார் என்று நேற்றுக் குறிப்பிட்டேன்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, கட்சி இரண்டுபட்டு, மாநாடு நடத்தப்படாமல் இழுபட்டால் யாருக்கு கொண்டாட்டம், யார் பதவியில் நீடிப்பார்கள் என்பவை எல்லாம் நான் கூறத் தேவையில்லை. வாசகர்களுக்கே நன்கு தெரியும்.
அப்படி நன்மையடைய விரும்புபவர்கள், அதற்காக சர்ச்சைகளை ஊதி பெருப்பிக்க இடம் அளித்து நிற்கின்றனர் - முடிவு செய்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் தங்களிடமிருந்தும், அதை உறுதியாகச் செய்யாமல். பதவியில் நீடிக்கும் ஆசைதான் அதற்கும் காரணம்.
எது, எப்படி என்றாலும் கட்சியின் அடுத்த அரசியல் குழு கூட்டம் சம்பந்தனின் இல்லத்தில் நடக்குமானால் பலருக்கு செம அர்ச்சனைக்கு இடம் இருக்கும் என்றே தோன்றுகின்றது. கடைசிக் காலத்தில் இப்படி எல்லாம் அனுபவம் பெற நேரிட்டதே என்று சிலர் கவலைப்படும் சந்தர்ப்பங்கள் கூட இடம்பெறலாம்.
கடைசியாக ஒரு கொசுறுத் தகவல்:-
கட்சித் தலைமைக்கு போட்டியிடும் ஒருவர் கூட மாநாட்டு ஒழுங்குமுறைகள், தேர்வு ஏற்ப்பாடுகள், விதிமுறைகள் குறித்து ஆட்சேபக் கடிதம் ஒன்றைக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம். ஆனால், அது மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரும் கடிதம் அல்ல என்கிறார் அவர்.
ஆனால் மாநாட்டை ஒத்திவைக்கும் கட்டாயம் இருப்பதாக சிலருக்கு தகவல் சொல்லி இருக்கும் கட்சித் தலைவரோ, அதற்கான காரணங்களில் ஒன்றாக அந்தக் கடிதத்தையும் தலைமைக்கான அந்த வேட்பாளரின் நிலைப்பாட்டையும் சில தரப்புகளுக்கு முன் வைக்கிறார்.
கடவுளே! தமிழரசுக் கட்சியை நீதான் காப்பாற்ற வேண்டும்...!