Monday, October 5, 2026

ஸ்டாலினும் பழனிசாமியும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டு


ஒவ்வொரு நாளும் மு.க.ஸ்டாலின், பழனிசாமி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றனர்” என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.

மேலூரில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இப்போட்டியை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்த ஊழல்கள் தொடர்பாக கிடைத்த ஆதாரப்பூர்வ ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பொலிஸ், வழக்கு பதிந்து விசாரணை செய்கிறது. சோதனை நடந்த இடங்களில் பல்லாயிக்கணக்கான கோடி ரூபா மக்கள் பணம் ஊழலாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இன்று காலையில் கூட முயற்சித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும், பழனிசாமியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் விஜய் வரவேண்டும் என, வாக்களித்துள்ளதால் குறுக்கு வழியில் யாரையாவது விலைக்கு வாங்கலாமா என, குதிரை பேரத்தில் ஸ்டாலின் உதயநிதி, பழனிசாமி போன்றோர் ஈடுபடுகின்றனர்.

இதன் வெளிப்பாடுதான் கூட்டணியை விட்டு, அவர்களை விட்டு கூட்டணிக் கட்சியினர் வெளியேற முக்கிய காரணம். ம.தி.மு.கவின் எம்.எல்.ஏக்களை அவர்கள் கட்சி கூட்டத்துக்குப் போகவிடாமல் செய்தது யார்?. அவர்கள் ஆட்சியில் இருந்த போது, என்னவெல்லாம் செய்திருப்பார்கள். கூட்டணியில் இருந்த வி.சி.க. உள்ளிட்ட பல பேரைப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து தி.மு.க. மிரட்டியது. இப்போதும் அந்த வேலையைச் செய்கின்றனர். ஆனால் தி.மு.கவில் பல எம்.எல்.ஏக்கள் உடன்படவில்லை. அவர்கள் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இரண்டு குடும்பத்தின் சொத்துக்களையும் பாதுகாக்க, ஊழலை மறைக்கவே இரண்டு பேரும் சுயநலமாக முடிவெடுக்கின்றனர். அவர்கள் ஜனநாயக படுகொலை செய்யவும் தயாராக இருக்கின்றனர். இதற்கான முயற்சி இந்த நிமிடம்வரை நடக்கிறது.

இயற்கை வளங்களை கொள்ளை அடித்தவர்களை இந்த அரசு மன்னிக்காது. அ.தி.மு.க., தி.மு.கவின் பேராசையால் பல இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மதுரையைச் சுற்றி மலையே இல்லை. பாதியை வெட்டி வெளியே போட்டது போல் உள்ளது. ஊழல், இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கு எந்த மன்னிப்பு இருக்காது. கிரானைட் வழக்குகளில் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார்.


you may also like