Friday, October 9, 2026

ஸ்காட்லாந்தில் கருங்குருவிகளை அச்சுறுத்தும் உசுட்டு வைரஸ்


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஆரன் தீவில் கருங்குருவிகள் விசித்திரமான அறிகுறிகளுடன் உயிரிழந்து வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதற்குக் காரணமாக உசுட்டு (Usutu) வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொசுக்கள் மூலம் பரவும் இந்த உசுட்டு வைரஸ் முதன்முதலாக 1959ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது. தற்போது அது ஸ்காட்லாந்தின் சில பகுதிகளிலும் பரவி வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வைரஸை பரப்பும் பழுப்பு-சாம்பல் நிற Culex pipiens வகை கொசுக்கள் மற்றும் அவற்றின் மூலம் நோய் பரவும் விதம் தொடர்பாக நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்தின் தொற்றுநோய் நிபுணர் ஹீதர் பெர்குசன், கொசுக்கள் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் மட்டுமல்லாமல், அவற்றின் உடலுக்குள் வைரஸ் பெருகவும் வெப்பமான காலநிலை அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், நோய்த்தொற்றுள்ள கொசுக்கள் மனிதர்கள் அல்லது விலங்குகளை கடிக்கும் போது வைரஸ் பரவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த வைரஸ் தற்போது பொது சுகாதாரத்திற்கு உடனடி அச்சுறுத்தலாக கருதப்படவில்லை என்றாலும், பறவைகள் மீது ஏற்படுத்தி வரும் தாக்கம் கவலைக்குரியது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் முன்னதாகவே கருங்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவதற்கு இந்த உசுட்டு வைரஸ் காரணமாக இருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருங்குருவிகள் மட்டுமன்றி, ஆந்தைகள், கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பல்வேறு பறவை இனங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என ஹீதர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த நிலைமை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

you may also like