Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (03.6.2025)


பொதுத் தேர்தல் சமயம் தமிழர் தரப்பு அரசியலிலும் அதிகம் பேசப்பட்ட விடயங்களில் ஒன்று மதுபான சாலைகளுக்கு உரிமம் கொடுத்த விவகாரமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் தரப்புகளுக்கு அவர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை சுருட்ட வகை செய்யும் விதத்தில் அரசியல் லஞ்சமாக இந்த பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன என்பதுதான் அப்போதைய குற்றச்சாட்டு.

தாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், அது பற்றிய விடயங்களை அம்பலப்படுத்துவோம் என்று கூறிய அநுர குமார திஸநாயக்கவும் சகாக்களும், இப்போது ஆட்சி அதிகாரங்களை முழுமையாகக் கைப்பற்றிய பின்னரும், அந்த விவகாரத்தை மூடி மறைத்து சம்பவம் பண்ணுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தப் பெரும் ஊழல் தொடர்பில் அப்போதே போடப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் இப்போது விசாரணைக்கு வந்திருக்கின்றன். அது பற்றி கடந்த வாரமும் என் பத்தியில் கோடி காட்டி இருந்தேன்.

நேற்றும் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருண, சம்பத் விஜேரத்னா ஆகியோர் முன்னிலையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.

அச்சமயம் அது விடயமாக கூறப்பட்ட இரண்டு அம்சங்கள் முக்கியமானவை.

நான்கு மனுதாரர்களில் ஒரு தரப்பு மேற்படி மதுச்சாலை உரிமம் பெற்ற ஒருவருக்கு அந்த உரிமம் வழங்கப்படுவது தொடர்பாகக் கலால் திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்தக் கடிதத்தில், அக்கடிதத்தின் பிரதி, யாழ்ப்பாணைம் எம்.பி. ஒருவருக்கு அனுப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை அத்தரப்பு சுட்டிக்காட்டியது.

அந்த எம்.பிக்கும் இந்த லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால் அந்த கடிதத்தின் பிரதி அந்த எம்.பிக்கு அனுப்பப்பட்டது ஏனென்று அந்த மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியது. இது தொடர்பில், இந்த விவகாரத்தை குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளித்து, புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதேசமயம் இந்த வழக்கை ஒட்டி, கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, அச்சமயம் கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக இருந்தவர் கடித உறைக்குள் சீல் இட்டு, நீதிமன்றத்திற்கு உரிய இரகசிய ஆவணம் என்ற பெயரில் ஒரு விடயத்தை சமர்ப்பித்திருந்தார் என்று கடந்த வாரம் குறிப்பிட்டு இருந்தேன்.

அத்தகைய ஆவணத்தின் பிரதி தங்களுக்குத் தரப்படாமல், தாங்கள் இருட்டில் இருந்து கொண்டு இந்த விவகாரத்தில் சட்ட விவாதத்தை நடத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நேற்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து, இந்த ஆவணத்தின் பிரதிகளை மனுதாரர்கள் தரப்புக்குக் கையளிக்கலாமா என்பதை தற்போதைய கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் கேட்டு, விசாரித்து, நீதிமன்றுக்குத் தெரிவிக்கும்படி நீதியரசர்கள் அரச சட்டத்தரணியிடம் நேற்றுக் கூறினர்.

தாங்கள் இவ்விடயம் குறித்து ஏற்கனவே தற்போதைய கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் விசாரித்து விட்டனர் என்றும், அந்த இரகசிய அறிக்கையில் அல்லது ஆவணத்தில் முன்னைய கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்ன விடயத்தை சமர்ப்பித்திருக்கிறார் என்று தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், கலால் திணைக்கள அலுவலகத்தில் கூட அத்தகைய இரகசிய அறிக்கையொன்று உயர் நீதிமன்றத்திற்கு அப்போதைய ஆணையாளர் நாயகத்தினால் கையளிக்கப்பட்டமை தொடர்பான எந்த பதிவும் இல்லை என்றும், தற்போதைய ஆணையாளர் நாயகம் தங்களுக்கு தெரிவித்தார் என அவர் தரப்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

அப்படியானால் நீதிமன்ற பதிவாளருடன் தொடர்பு கொண்டு, சீல் இட்டு இரகசிய ஆவணமாக ஒப்படைக்கப்பட்ட அந்த தஸ்தாவேஜைப் பெற்றுக் கொண்டு, அதனைக் கலால் திணைகளத்தின் தற்போதைய ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பித்து, அவரது சம்மதத்தோடு அதன் பிரதிகளை மனுதாரர்களுக்கு கையளிக்கலாமா என்பதை வரும் வியாழக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் போது தெரிவிக்கும்படி நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

சம்பந்தப்பட்ட இரகசிய ஆவணம் மனுதாரர் தரப்புக்கு கிடைக்கும் போது,சில சமயங்களில் இந்த மதுச்சாலை உரிமம் வழங்குவதில் கோடிகள் உழைத்த அல்லது அவற்றை அரசியல் லஞ்சமாக தாங்கள் பரிந்துரைத்தவர்களுக்கு அரசைக் கொண்டு வழங்க செய்து, அதன்மூலம் கோடிகள் சுருட்டிய எம்.பிக்களின் விவரம் சில சமயங்களில் தெரிய வரலாம் எனக் கருதப்படுகிறது. அதை அறிய வரும் வியாழக்கிழமை வரை நாம் காத்திருக்க வேண்டும்.

+++++++++++++++++++++

இந்த அரசியல் சந்தடிகள், களேபரங்களுக்கு மத்தியில், தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது.

சுமந்திரன், சிறிதரன் உட்பட இந்த வழக்கின் எதிராளிகள் நீதிமன்றுக்கு சமுகம் தருபவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காலமாகி விட்டமையால், அவரது மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்து, அவரது இடத்துக்கு பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து நீதிமன்றம் நாளை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு வழக்கு ஒத்திவைக்கப்படலாம்.

+++++++++++++++++++++

நாடாளுமன்றத் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும், இப்போது உள்ளூராட்சித் தேர்தலிலும் முன்னணிக்கு வந்தது தேசிய மக்கள் சக்தி.

இப்போது உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே ஒன்று திரண்டு, ஒர் அணியாக நின்று, தேசிய மக்கள் சக்தியை உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைக்க விடாது முறியடிப்பதற்காக தற்காலிகக் கூட்டுக்களை அமைத்து வருகின்றன.

அதுதான் வடக்கு - கிழக்கிலும் நடக்கின்றது என்கிறார் அன்பர் ஒருவர்.

வடக்கு, கிழக்கில் தேர்தலில் முதலாம் இடம் தமிழரசுக்கு. இரண்டாம் இடம் தேசிய மக்கள் சக்திக்கு. மூன்றாம் இடம் சங்குக்கு. நான்காம் இடம் சைக்கிளுக்கு.

தென்னிலங்கையில் முதலாம் இடத்தைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு அடுத்து வந்த நிலையில் உள்ள கட்சிகள் தமக்குள் ஒன்றிணைவது போல, வடக்கு, கிழக்கிலும் முன்னணிக்கு வந்த தமிழரசை வீழ்த்துவதற்கு மூன்றாம், நான்காம் இடங்களில் வந்த கட்சிகள் நேற்று முதல் தங்களுக்குள் இணைந்து இருக்கின்றன. இரண்டாவது வந்த கட்சி பின்புலத்திலிருந்து அந்த நகர்வுகளுக்கு ஆதரவு தருவதாகக் கூறப்படுகிறது.

ஆக அந்த அன்பரின் கூற்றுப்படி தெற்கில் நடப்பதுதான் வடக்குக் கிழக்கிலும் நடக்கின்றது.

முதலாவது வந்த தரப்பை வீழ்த்த, அடுத்து வந்தவை தங்களுக்குள் இணைவது வழமைதான்...!

you may also like