- by Editor
- 9 months ago
வைத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி? GMOA குற்றச்சாட்டு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியப் பிரிவுகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி, நாட்டின் வைத்திய சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களுக்கும் ஏனைய வைத்தியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது பாரிய சவாலாக மாறியிருந்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக சுகாதார அமைச்சு மற்றும் வைத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அனைத்து வைத்தியர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக ‘இலங்கை வைத்திய சேவை’ என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியர்களுக்குமான தனித்த சேவைப் பிரிவொன்றை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மாத்திரம் தனித்த சேவைப் பிரிவொன்றை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது வைத்தியர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வைத்தியப் பிரிவினருக்கு மாத்திரம் தனித்த சேவை யாப்பை உருவாக்குவதற்கு தமது சங்கம் ஒருபோதும் இணங்காது எனவும், அவ்வாறான நடவடிக்கை இலவச சுகாதார சேவை மற்றும் நோயாளர் பராமரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமது வாய்மொழி மற்றும் எழுத்துமூல கருத்துக்களை சம்பந்தப்பட்ட குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், குழுவின் அறிக்கையை வழங்குமாறு பல தடவைகள் கோரியும் இதுவரை அது வழங்கப்படவில்லை எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனையடுத்து, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
அடுத்த கட்டமாக, சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வைத்தியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதுடன், அனைத்து வைத்தியர்களும் ஒற்றுமையுடனும் குழு மனப்பான்மையுடனும் சேவையாற்றக்கூடிய ‘இலங்கை வைத்திய சேவையை’ உருவாக்குவதற்கான அடுத்தகட்ட தீர்மானகரமான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.