Wednesday, October 7, 2026

வவுனியாவில் இரு பஸ்களின் ஊழியர்கள் கைகலப்பு! - நால்வர் வைத்தியசாலையில் சேர்ப்பு!


வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி, நடத்துனருக்கும், தனியார் பஸ் சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் தரித்து நின்றது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் வருகை தந்து புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாகத் தரித்து நின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இரு பஸ்களின் ஊழியர்களுக்கும் இடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன்,  இ.போ.ச. பஸ்ஸின் லைட்டும் உடைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச. பஸ், தனியார் பஸ் ஆகியவற்றின் சாரதிகள்இ நடத்துனர்கள் என நால்வரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் இரு பஸ்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணைகளையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

you may also like