Friday, October 9, 2026

வருமான இலக்கை மீறி இலங்கை சுங்கம் சாதனை


இலங்கை சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டி, நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை கணிசமாக மீறியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாதங்களுக்கான வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த இலக்கை விட 313 பில்லியன் ரூபா அதிகமாக சுங்கத் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டிற்கான சுங்கத் திணைக்களத்தின் மொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வருவாய் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த ஆண்டு பதிவான 2.5 ட்ரில்லியன் ரூபா என்ற சாதனை வருமானத்தையும் இந்த ஆண்டு தாண்டும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், ஜூலை மாதத்திற்கான வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாதத்தின் முதல் இரண்டு நாட்களிலேயே 31 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடர்வதால், அந்தத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஓரளவு குறைவு பதிவாகி வருவதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

you may also like