Friday, October 9, 2026

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று (23) காலை 05:30 மணியளவில் வட அட்சரேகை 18.0°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.7°E க்கு அருகில் நிலைகொண்டிருந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு வேளையில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பிராந்தியங்களுக்கான எச்சரிக்கைகள்:

எச்சரிக்கை பகுதி ('Warning'): இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆலோசனை பகுதி ('Advisory'): காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.

மீனவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

வட அட்சரேகை 07°N - 22°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 83°E - 95°E ஆகிய கடல் எல்லைகளுக்குள் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (23) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

you may also like