- by Editor
- 2 years ago
அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்து மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்குமாறு சவுதி அரசிடம் கோரிக்கை
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
சவுதியில் உள்ள இலங்கையரான அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனையை இரத்து செய்து, அவருக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்குமாறு சவுதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் சிவசிறி தர்மகுமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் பிரதம மௌலவி ஏ.எஸ்.எம். அசீம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சர்வமதத் தலைவர்கள், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் பேசுபொருளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
சமூக ஊடகப் பதிவொன்றில் முஹம்மது நபி தொடர்பாக அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த கருத்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்ட சர்வமதத் தலைவர்கள், எனினும் மனிதாபிமான அடிப்படையில் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரது தண்டனையை மாற்றி அமைத்து வாழ்வதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
“அவருக்கு மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என சவுதி அரசாங்கத்திடம் மன்னார் சர்வமதப் பேரவை மற்றும் மன்னார் பிரஜைகள் குழு சார்பில் பணிவுடன் விண்ணப்பிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அனோஜனின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்புக்காக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் பள்ளிவாசல் சமூகங்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பிலும் சவுதி அரசாங்கத்திடம் மீண்டும் ஒருமுறை கோரிக்கை முன்வைப்பதாகக் குறிப்பிட்ட சர்வமதத் தலைவர்கள், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அனோஜனுக்கு மரண தண்டனையிலிருந்து விடுதலை அளித்து, மன்னித்து, சமய நல்லிணக்கத்திற்குப் பங்களிக்கும் வகையில் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.