- by Editor
- 2 months ago
ராகுல், பிரியங்கா கைது!
-
- by Editor,
- 23 hours ago
- in இந்திய செய்திகள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட இருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் டில்லி பொலிஸார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சுமார் 300 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நேற்று முன்தினம் பேரணியாகச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டில்லியில் நேற்று மதிய விருந்தளித்தார். மத்திய டில்லியின் ஜன்பத் பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த விருந்து அளிக்கப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, சி.பி.எம். எம்பி ஜான் பிரிட்டாஸ், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று நான் கூறியதுபோல சுமார் 300 எம்.பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க விரும்பினர். ஆனால், அங்கு போராட்டம் நடத்த முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே, போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு போராட திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கிருந்து அவர்கள் ஜந்தர் மந்தருக்கு மூன்று பஸ்களில் புறப்பட்டனர். அவர்களின் பஸ்களை அசோகா வீதியில் மறித்த டில்லி பொலிஸார், ஜந்தர் மந்தரில் முன் அனுமதியின்றி போராடக் கூடாது என கூறினர்.
பஸ்ஸில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் ராகுல் காந்தியை தூக்கி பஸ்ஸில் அமர வைத்தனர். அதேபோல், ஏனைய எம்.பிக்களும் கைது செய்யப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி வீதியிலேயே படுத்துக்கொண்டார். பெண் பொலிஸார் அவரை கைது செய்து பஸ்ஸில் ஏற்றினர். அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டியும் வந்தே மாதரம் என்று கூறியும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.