Saturday, October 10, 2026

ராகுல் காந்தி கைது!


தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை பொலிஸார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதால், அகில இந்திய வானொலி நிலையத்தில் உள்ளிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காலை முதல் தொடர்ந்து 9 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ராகுல் காந்தி கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வானொலி நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வாக்குத் திருட்டில் ஈடுபடுகின்றனர் என ராகுல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டி ல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் நேற்று பேரணியாகச் சென்றனர்.

தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற வீதியில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கிருந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளே நுழைந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.


you may also like