Saturday, October 10, 2026

நந்தா மாலினியின் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் - பிரதமர்


இலங்கை இசைத்துறையின் பொற்காலக் குரலாகப் போற்றப்படும் மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நந்தா மாலினியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமர் இன்று (21) பாராளுமன்றத்தில் வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய எட்டு தசாப்தங்களாக தனது தனித்துவமான பாடும் ஆளுமையால் இலங்கையின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய நந்தா மாலினியின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நந்தா மாலினியின் பாடல்களைக் கேட்டு, அவற்றுடன் தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் கடந்த ஒரு ரசிகையாக, அவரது இழப்பு இலங்கை இசைத்துறையின் ஒப்பற்ற கலை ஆளுமையை இழந்ததற்கு அப்பாற்பட்டதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது குரல் மக்களின் வாழ்க்கையுடனும் நினைவுகளுடனும் பின்னிப் பிணைந்திருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், மகிழ்ச்சி, துயரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் அந்தக் குரல் மக்களுடன் பயணித்ததாக கூறினார்.

நந்தா மாலினியின் பாடல்கள் ஒரு தலைமுறையின் வாழ்க்கை அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததுடன், அவரது இனிய குரலுடன் தொடர்புடைய நினைவுகள் அவரது மறைவுக்குப் பின்னர் மேலும் ஆழமாக நினைவுகூரப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அவரது குரல் வீடுகள், பாடசாலைகள், விழாக்கள் மற்றும் தேசிய நிகழ்வுகள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

காதல் மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளைப் பாடுவதைக் கடந்து, சாமானிய மக்களின் துயரம், பயம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு நந்தா மாலினி தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அநீதிக்கு எதிராகவும், அமைதி, சகவாழ்வு, மனிதநேயம் மற்றும் சமூக நீதிக்காகவும் அவர் அச்சமின்றி குரல் எழுப்பியதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நந்தா மாலினியின் பாடல்கள் வெறும் இசையாக இல்லாமல், மக்களின் வாழ்வோடு பயணித்து, அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த குரலாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் விட்டுச் சென்ற பாடல்கள், கலைப் பாரம்பரியம் மற்றும் சமூகத்திற்காக ஒரு கலைஞர் ஆற்றக்கூடிய பொறுப்பு தொடர்பான முன்மாதிரி ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டியாக அமையும் என பிரதமர் தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் நந்தா மாலினியின் குரல் வெறுமனே பாடலாக அல்லாமல், நீதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் நாட்டின் மீதான அன்புக்காக ஒலித்த துணிச்சலான குரலாகத் தொடர்ந்து நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

you may also like