- by Editor
- 1 year ago
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண ஹென்னதிகே ஆகிய மூவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம வழங்கிய உத்தரவின்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ரூ.1 இலட்சம் ரொக்கப் பிணையிலும், தலா ரூ.10 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சரீரப் பிணையாளர்கள் தங்களது வருமானம் அல்லது சொத்து விவரங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், மூவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கடவுச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டார்.
'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன தொடர்பான வழக்கில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரது மனைவியிடமிருந்து பெருமளவு இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க மற்றும் அருண ஹென்னதிகே ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.