Saturday, October 10, 2026

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ரூ.6.7 பில்லியன் நிதி


இலங்கையின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் 2025 முதல் 2030ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் கீழ், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் 2027ஆம் ஆண்டுக்கான ‘முடிவு சார்ந்த திட்ட மேம்பாடு’ நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) தம்புள்ளையில் நடைபெற்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.டி.எம்.யூ.டி.பி. தென்னகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ‘ஒரு மாகாணத்திற்கு ஒரு திட்டம்’ என்ற அடிப்படையில், 2027ஆம் ஆண்டுக்காக நாட்டின் 9 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் இடம்பெற்றன.

ஒவ்வொரு மாகாணத்துக்கும் ரூ.750 மில்லியன்

2027ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ.750 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலதனமாக மொத்தம் ரூ.6.7 பில்லியன் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான 2027ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்து, எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2027 ஜனவரி மாதம் முதல் மாகாணங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒதுக்கீடு

‘முடிவுகள் அல்லது இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட கடன் – 2020-2030’ திட்டத்தின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியுதவியையும் அங்கீகரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சுகாதார இலக்குகள் மற்றும் சுட்டெண்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, நிதி ஒதுக்கீடுகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்.

இதற்காக நாட்டின் 9 மாகாண சுகாதாரத் திணைக்களங்களும் மத்திய சுகாதார அமைச்சும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நிதி முறையாகவும் திறம்படவும் பயன்படுத்தப்படுவதையும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்படுவதையும் உறுதி செய்யும் வகையில், 9 மாகாணங்களின் பிரதான செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பங்கேற்புடன் நிதி ஆணைக்குழுவினால் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படுகின்றன.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு தனியான நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுத் தலைவர் டைலின் சென், சிரேஷ்ட பொதுச் சுகாதார விசேட ஆலோசகர் வைத்தியர் குமாரி வினோதினி நவரத்ன, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

you may also like