Saturday, October 10, 2026

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் அதிரடித் திருப்பம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (03) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ். லெனின்குமார் இதனை குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 18ஆம் திகதி சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சடலம் மார்ச் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவுரையாளரின் மகளும் மருமகனும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய விசாரணையின்போது, சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்ற சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றச்சம்பவம் விரிவுரையாளரின் வீட்டிலேயே இடம்பெற்றிருப்பது தெளிவாகியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனின் விளக்கமறியல் காலத்தையும் அன்றைய தினம் வரை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.

முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டுதலின் கீழ் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினர்.

you may also like