Friday, October 9, 2026

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மட்டுமல்ல... முழு இலங்கையும் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் - அர்ச்சுனா


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை மட்டும் அல்லாமல் முழு இலங்கையையும் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது சமீபத்திய இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், தமிழ்நாடு தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் போது, அந்நிய நாட்டிற்கு வந்த உணர்வு இல்லை. முன்னதாக யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் தற்போது முழு இலங்கையையும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்” என அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஊழல் பரவலாக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர் அல்ல என்றும், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

“2009 மே 18 அன்று இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை முன்னெடுத்த சிங்கள இனவாத அடக்குமுறை அரசாங்கத்திற்கே நான் எதிரானவன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் தமிழ் மற்றும் சிங்கள பிரதிநிதிகளுக்கிடையில் வேறுபாடு இல்லை என்றாலும், சுயநல அரசியல்வாதிகளின் அரசியலால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனுடன், சீமான் மீது பயன்படுத்தப்பட்ட இழிவான சொற்களை கண்டித்த அவர், தமிழ் மக்களின் தியாகங்களையும் வலிகளையும் பயன்படுத்தி நிதி திரட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

you may also like