Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (11.09.2024)


தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் இன்று நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து, போஷாக்குக் குறைபாட்டை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு ஆபத்து எச்சரிக்கையை ஏற்படுத்தும் அவதானிப்பு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 16,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனவாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தலைமையிலான குழு, சுமார் இருபத்தியைந்து வீதமான - அதாவது நாட்டில் நாலில் ஒரு - குடும்பங்கள் தமது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பிறரின் உதவியை நம்பியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் சதவீதம் 2023 இன் மூன்றாம் காலாண்டில் 24 வீதமாக உயர்ந்திருந்தது. அது இப்போது மேலும் உயருகின்றது.

அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் சமையல் வேளைகளைக் குறைத்துள்ளன அல்லது தங்கள் உணவு நுகர்வைக் குறைத்துள்ளன.

குழுவின் அறிக்கைப்படி 2022 உடன் ஒப்பிடும்போது அதிக எடை மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை மிக ஆபத்தான அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில், தற்போது 24.6 வீதக் குழந்தைகள் அதிக எடை மற்றும் வளர்ச்சி குன்றியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது நெருக்கடியின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

இவை பற்றி எல்லாம் கவனிக்காமல், நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு மூச்சு விடப் பண்ணி விட்டதாக புளுகிக் கொண்டிருக்கின்றது அரசுத் தலைமை.

***

அவ்வப்போது அதிர்ச்சி தரும் அரசியல் குண்டுகளைப் போடும் அரசியல்வாதிகளில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் ஒருவர். அவர் தெரிந்த ஒரு விடயத்தை ஒட்டிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கின்றார்.

இலங்கையில் முதலீடு செய்ய ஜப்பான் தயக்கம் காட்டுவதற்கு இலங்கை அமைச்சரவையில் நிலவும் ஊழல்தான் காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கூற்றுப்படி, லஞ்சம் கோரும் சில நபர்கள் அதிகாரப் பதவிகளில் இருப்பதால், ஜப்பானைச் சேர்ந்த பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கின்றன என ஜப்பானிய பிரதிநிதிகள் அவருக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலைமை குறித்து விஜயதாஸ ராஜபக்‌ஷ தனது ஆழ்ந்த சங்கடத்தை வெளிப்படுத்தினார். இது தன்னையும் தேசத்தையும் மோசமாக பாதிக்கின்றது என்று அவர் விசனத்துடன் கூறினார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர் ஒருவர் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து 800 கோடி ரூபா லஞ்சம் கோரினார் என நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அந்தப் பிரகிருதிக்கு அமைச்சரவை அந்தஸ்துடன் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கினார் என விஜயதாஸ ராஜபக்‌ஷ மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த அமைச்சரை கோட்டாபய நீக்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அவ்வாறு செய்யத் தவறியதால், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் முதலீடுகளை நிறுத்தியதாகவும் கூறுகிறார்.

ஊழல் பேர்வழிகளுக்குத்தான் ரணிலின் அரசில் முக்கிய இடங்கள் போலும்...!


you may also like