- by Editor
- 2 years ago
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு !
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு !
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். என அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
- மேலும் அவ் அறிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தல் வேண்டும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள்.
வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமாக இது அணுகப்படல் வேண்டும்.
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.