Friday, October 9, 2026

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை


இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) தீர்ப்பளித்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினப் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

குறித்த உணவு வழங்கும் நடவடிக்கைக்காக மாரவில பகுதியில் அமைந்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனமொன்றுக்கு, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த பணத்தைச் செலுத்துவதற்காக அப்போது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்ன, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியைத் தூண்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

you may also like