- by Editor
- 2 years ago
முதலமைச்சர் வேட்பாளராக நான் களமிறங்கவேமாட்டேன் : தமிழரசின் எம்.பி. சிறீதரன் திட்டவட்டம்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்குத் துளியளவும் இல்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகிறீர்களா?' - என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வலுத்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.
இவ்வாறான இழுபறியில் மாகாண சபைத் தேர்தல் நடந்தால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு நான் தயாரில்லை.
எமது கட்சி தற்போது வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
தாயை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது போல் எமது கட்சி காணப்படுகின்றது. அதாவது கட்சியை வழக்கிலே வைத்துக் கொண்டு - பெற்ற தாயை நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டு நாங்கள் அம்மாவிடம் உணவு கேட்கப் போகின்றோம், அம்மாவிடம் பால் அருந்தப் போகின்றோம் என்று சொல்லிக்கொள்வது அல்லது பதவிகளுக்காக நாங்கள் அடிபடுவது அல்லது பதவிகளுக்காகத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருப்பது ஓர் இன விடுதலைக்கான அரசியல் அல்ல.
நாங்கள் செய்வது ஒரு தேச விடுதலைக்கான அரசியல்தான் என்பது எல்லோருக்குமே தெரியும். தமிழினம் இத்தனை ஆண்டுகளாக - தன்னுடைய விடுதலைக்காகத் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் எனத் தொடர்ந்து போராடிக் கோண்டிருக்கின்ற ஓர் இனம்.
இது பதவிகளுக்குப் பேரம் பேசுகின்ற காலம் இல்லை. ஆகவே, பதவிகளை முக்கியத்துவப்படுத்தி அரசியல் செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கு என்ன பதவி கொடுக்கலாம், இவர் என்ன பதவிக்கு வரலாம் என்ற இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
இன்று எங்களிடம் இருக்கின்ற சில இளைஞர்கள் பதவிகளுக்காக அதாவது இன்ன, இன்ன பதவி கிடைக்கும் எனக் கருதி இதற்காகக் கட்சிகளில் சேர்ந்துகொள்ளலாமா என்கின்ற எண்ணங்களைக் கூட கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், பல இளைஞர்கள் கொள்கைகளுக்காகத் தமிழ்த் தேசிய விடுதலைக்காகத் தங்களை இதற்குள் முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இவ்வாறான சூழல் இருக்கும்போது முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.
அத்தகைய எண்ணங்களை நான் கொண்டிருக்கவும் இல்லை. அவ்வாறான ஒரு போட்டிக் களத்துக்குள் இப்போது இறங்கிக்கொள்ளவும்
தயாராக இல்லை என்பதை மிகத் தெளிவாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்." - என்றார்.