- by Editor
- 3 months ago
இரகசியம் - பரகசியம் (13.07.2024)
தமக்கு இயைவான இருவரை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்குப் பதில் அரச அதிபர்களாக வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் யாழ்., கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டி விட்டார் போலும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று யாழ். வந்திருந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து சுமந்திரன் எம்.பி. மேற்படி இரண்டு மாவட்டங்களுக்கும் நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரியிருந்தார்.
கூட்டம் முடிந்த பின்னர் இடைவேளை சமயம் இது குறித்து சுமந்திரனுடன் ஆறுதலாகவும் விரிவாகவும் பேசியிருக்கின்றார் அரச அதிபர் நியமனங்களுக்கும் பொறுப்பான பிரதமர் தினேஷ் குணவர்தன.
''தேர்தல் வரப்போகின்றது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இரண்டும் ஒரு தேர்தல் மாவட்டம். இதற்கு ஓர் அரசு அதிபராவது உரிய தரத்தில் இருப்பது அவசியம். அப்போதுதான் அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான தேர்தல் அதிகாரியாக - தெரிவத்தாட்சி அலுவலராக - அவரைத் தேர்தல் ஆணையம் நியமிக்க முடியும். வழக்கமாக யாழ் மாவட்ட அரச அதிபரையே யாழ்., கிளிநொச்சி ஒன்றுபட்ட தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலராக நியமிப்பது முறைமை. இல்லையேல் அரச அதிபர் அல்லாத வெளி அதிகாரி ஒருவரைத் தேர்தல் ஆணையம் அந்த மாவட்டத்துக்கான தெரிவத்தாட்சி அலுவலராக நியமித்து அனுப்பிவிடும். அது, மாவட்டத்தின் தேர்தலைச் சுமுகமாக நடத்தும் விடயத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தும்.
''ஆகையால் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட முன்னர் குறைந்தபட்சம் யாழ் மாவட்டத்திற்காவது நிரந்தர - உரிய தரமுடைய - அதிகாரியை நியமிப்பதன் மூலம் வீண் குழப்பங்கள் ஏற்படாமல் சமாளித்துக் கொள்ளுங்கள்.'' - என்று தெளிவாகவும் விளக்கமாகவும் ஆலோசனை கூறியிருக்கின்றார் சுமந்திரன் எனத் தெரிய வருகிறது.
அப்போது அருகில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கிட்டார்.
''பதில் அரச அதிபர் ஒருவர் கடமையில் இருந்தால் போதுமானதுதானே...!'' - என்று பிரதமருக்கு எடுத்துரைக்க முயன்றார்.
''அந்தப் பதவிக்கான தரநிலையில் ஒருவர் இல்லாத இடத்தில், அந்த மாவட்டத்துக்கான தெரிவத்தாட்சி அலுவலருக்கான அதிகாரங்களை தேர்தல் ஆணையம் அவருக்கு வழங்காது.'' - என்று சுமந்திரன் கூறினார்.
இதனை அடுத்து, உடனடியாகவே கொழும்பில் உள்ள தமது அமைச்சின் உயர் அதிகாரிகளோடு பிரதமர் தொலைபேசியில் உரையாடி சில வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை வழங்கினார் எனத் தெரிகின்றது.
மாவட்ட அரச அதிபர் பதவிக்கான தர நிலையை அண்மையில் எட்டிய எழிலரசி வடக்கு மாகாண நிர்வாகத்தில் ஓர் உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவரை மன்னார் அரச அதிபராக நியமிப்பதற்கும், தற்போது மன்னார் அரச அதிபராகப் பணி புரியும் கனகேஸ்வரனை யாழ்ப்பாண அரச அதிபராக நியமிப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக உள்வீட்டு வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டது.