- by Editor
- 3 weeks ago
மீண்டும் கருணா - பிள்ளையான் இணைந்தனர்
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இணைந்து கொண்டார். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காகப் புதிய முயற்சியொன்றை பிள்ளையான் மேற்கொண்டு 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பை உருவாக்கினார். அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினர் இணைந்துகொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 15 ஆம் திகதி சைச்சாத்திடப்பட்டது.
இதனையடுத்து, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து வியாழேந்திரன் அணியினர் களமிறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கும் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து, பிரிந்திருந்த கருணா - பிள்ளையான் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணைவு கிழக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.