Friday, October 9, 2026

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்: மீனவர்கள் மனு


மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகையும் மீட்க வலியுறுத்தி தருவைக்குளம் மீனவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர், எஸ்.பியிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த மாதம் 1 ஆம் திகதி ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். ஒக்டோபர் 20 ஆம் திகதி முல்லைத்தீவு எல்லை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த மாலைதீவு கடலோர காவல் படையினர், மாலைதீவு கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்களையும் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மாலைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மீனவர்கள் மாலைதீவு கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தனர் என்றும் தடை செய்யப்பட்ட சுறா மீன்களை பிடித்தனர் எனவும் கூறி மாலைதீவு அரசு 2.27 கோடி ரூபா அபராதம் விதித்துள்ளது.

இதனால். சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தருவைக்குளம் மீனவர்கள், பங்குத்தந்தை எஸ்.அந்தோணி மைக்கேல் வின்சென்ட் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் தருவைகுளத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான செவுள்வலை விசைப்படகு கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி 12 மீனவர்களுடன் மாலைதீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வார காலமாக மீனவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மீனவரகளுக்கு 2.27 கோடி ரூபா அபராதத் தொகையை மாலைதீவு அரசு விதித்துள்ளது. கடலையே நம்பி உழைக்கும் மீனவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக இதை கருதுகிறோம். மீன்பிடித் தொழில் செய்துவந்த மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தருவைக்குளம் பொதுமக்கள் சார்பில் ஓரிரு நாளில் போராட்டங்களை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

you may also like