- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (20.05.2024)
பொது வேட்பாளர் திட்டத்தை தமிழரசு நிராகரித்துவிட்டது. எதிர்பார்க்கப்பட்டதுதான்.
அதை ஆதரிக்கின்றோம் என வெளியில் கூறி வந்த தமிழரசுப் பிரமுகர்கள், தாம் அதை ஆதரித்தோம் என்பது கட்சியின் நேற்றைய மத்திய குழுக் கூட்ட அறிக்கைப் பதிவில் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு நின்று விட்டனர்.
கட்சிக்கு எதிரான வழக்குத் தொடர்பான விடயம் பேசப்பட்ட போது பந்தை முதலிலேயே சிறிதரன் எம்.பியின் களத்துக்குள் அடித்து விட்டு, அவரை விளையாட விட்டுப் பார்த்திருந்தனர் ஏனையோர். அவர் விருப்பப்படி - தீர்மானப்படி - முடிவு எடுக்கப்பட்டது.
வழக்கு எப்படியும் சுமுகமாகவும் விரைந்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சி.வி.கே.சிவஞானம், அதற்காக இரண்டு திட்டங்கள் - தீர்வுகள் - இருக்கின்றன, அதில் எந்தத் திட்டத்தை பின்பற்றுவது என்பதை சிறிதரன்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
திருகோணமலையில், கட்சியின் பொதுக்குழுவின் ஜனவரி 21, 27 ஆம் திகதிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தால், வழக்கை இணக்கமாகத் தீர்க்க முடியும் எனத் திருகோணமலை ஆயரின் இல்லத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வழக்காளி இணங்கினார் என்று கூறப்பட்டது. அதன்படி வழக்கை இணக்கமாகத் தீர்ப்பது - ஒன்று.
அடுத்தது - வழக்காளி கோரிய எல்லா விடயங்களுக்கும் இணங்கி, பொதுக் குழுத் தெரிவு, தலைவர் தெரிவில் இருந்து யாவற்றையும் - ஆரம்பத்தில் இருந்தே - கட்சி யாப்பை மீறாமல் ஒழுங்காக மேற்கொள்வது என்ற இணக்கத்தை - உடன்பாட்டை - வழக்காளியுடன் கண்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கி, வழக்கை சமரசமாக தீர்த்துக் கொள்வது.
இதில் இரண்டாவது தெரிவை சிறிதரன் விரும்பியமையால் மத்திய குழு அந்தத் திட்டத்தில் முயற்சிக்கும்படி தீர்மானம் எடுத்தது.
இது பற்றிய விடயங்களை சுமந்திரன், வழக்காளியின் சட்டத்தரணியுடன் பேசித் தீர்க்கலாம் என்று கூறிய போது சுமந்திரன் குறுக்கிட்டு, ''இல்லை, இல்லை, எல்லா எதிராளிகளின் சட்டத்தரணிகளும் சேர்ந்து கையாள்வதே முறையானதாக இருக்கும்'' என்று சொல்லி, அந்த விடயத்தை கூட்டுப் பொறுப்பாக்கிக் கொண்டார்.
முதலாவது தெரிவை சிறிதரன் எடுத்திருந்தால் அடுத்த வழக்கு தவணைக்குப் பின்னரே அவர் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சூழல் வந்திருக்கும். இரண்டாவது தெரிவில் புதிய தலைவர் தேர்வாகி, அவர் பதவியேற்க ஒன்று, ஒன்றரை வருடங்களாவது எடுக்கும் என்பது என் கணிப்பீடு.
ஏன் அந்த முடிவை சிறிதரன் எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
இதற்கிடையில், வழமை போல மாவை சேனாதிராஜா கட்சி யாப்பை மீறும் தனது குசும்புத்தனத்தை நேற்றும் காட்டத் தவறவில்லை.
கூட்டத்தின் நடுவே இரண்டு தடவைகள் தாம் கட்சித் தலைவராக நீடிக்க விரும்பவில்லை என்றார் அவர்.
அதில் ஒரு தடவை, ஆகவே சிறிதரன் எனக்குப் பதிலாக தலைவர் வேலையைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
ஒருவரும் அதற்குப் பதில் சொல்லவில்ல. இப்படித்தான் கட்சி யாப்பை உதாசீனம் செய்யும் பொறுப்பற்ற - தான்தோன்றித்தனமான - போக்கை அவர் தொடர்ந்து வருகின்றார்.
சிறிதரன் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்பதற்கு நீதிமன்றத் தடை இருக்கின்றது. கட்சித் தலைவரான மாவை அந்த பதவியில் செயல்பட முடியாத இடத்தில் அல்லது செயற்பட விரும்பாதவிடத்து அதற்கு மாற்று ஏற்பாடு என்னவென்பது கட்சி யாப்பிலுள்ளது. அதை மீறி, தம் இஷ்டப்படி ஒருவரைப் பதில் தலைவர் என்கிறார் மாவை சேனாதிராஜா. கட்சியைச் சீரழித்தமை போதாது என்று இருக்கும் எஞ்சிய காலத்திலும் தம் விருப்புக்காக யாப்பை மீறி, கட்சியைச் சின்னாபின்னப்படுத்திவிட்டுப் போவது என்பதில் அவர் குறியாக இருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.
கட்சியின் பத்திரிகையான 'புதிய சுதந்திரன்' பெயரைப் பயன்படுத்தி ஒருவர் இலத்திரனியல் பத்திரிகை வெளியிடுவது பற்றியும் நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டது. அந்தப் பெயரை அவர் பயன்படுத்துவது தவறு, அதைத் தடுக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அவருடன் பேசி, அந்தப் பெயரை அவர் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை மாவை சேனாதிராஜாவும் சிறிதரன் எம்.பியும் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டனர் எனத் தெரிகிறது.
மாவையால் இந்த விடயத்தை செய்ய முடியும், அதற்கு அவரிடம் திறமை இருக்கின்றது என்று நான் நம்பவில்லை. எனினும் சிறிதரன் கட்சிக்குள் தமக்கு கிட்டியிருக்கும் தகுதி நிலையை வைத்து இதை கையாள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
எது, எப்படி என்றாலும், கட்சி வழக்கின் வரும் 31ஆம் திகதித் தவணையின் போது, நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் 'புதிய சுதந்திரனை' வெளியிடுபவரையும் தாண்டி, பிற சட்டத்தரணி ஒருவர் மீதும் பாயும் சாத்தியம் இருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அமைதிப் பார்வையாளராக இருந்த ஒருவர் பின்னர் தெரிவித்தார்.
இது குறித்து சுமந்திரனிடம் விசாரித்தறியலாம் என்றால் மத்திய குழுக் கூட்டம் முடிந்த நேரத்திலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் மிஸ்ஸிங், எங்கள் தொலைபேசி அழைப்புகளிலும் அவர் சிக்கவில்லை.
ஊடகவியலாளர் சந்திப்பை அவர் புறக்கணித்தமையிலிருந்து ஒரு விடயம் எனக்குத் தோன்றியது.
வாயைக் கொடுத்து, உண்மையைப் பேசி, தம்மை தேசிய விரோதியாகச் சித்திரிக்க இடம் அளிக்காமல், மௌனம் பேணி, முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டமை போல தேசிய பாதையில் பயணிப்பதுதான் தமக்கு மேல் என்று அவர் கருதி விட்டார் போலும்.
மௌனம் பேணும் அவர் திட்டத்தில் எங்கள் தொலைபேசி அழைப்புக்களில் சிக்காமல் தவிர்ப்பதும் ஓர் அங்கமோ யாமறியோம்.
நேற்றைய தமிழரசுக் கூட்டம் எதிர்கால அதிர்வுகள் பலவற்றுக்கு வெளியே தெரியாத விதத்தில் - சத்தம் சந்தடியின்றி - விதை போட்டிருப்பதாகத் தகவல் எனக்கு உண்டு.
பார்ப்போம், அடுத்து வரும் நாள்களில்.