Friday, October 9, 2026

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு


யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு, கடந்த 1 ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஏ.பி. அமைப்பினர் நேற்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும், லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. அலுவலகத்தின் மீதும், பொலிஸார் மீதும் கற்களை வீசிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொலிஸ் வாகனத்துக்கும் தீ வைத்தனர்.

இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அனைவரும் அமைதி காக்குமாறு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார். லடாக்கில் சமீப ஆண்டுகளில் இப்படி ஒரு வன்முறை ஏற்பட்டது இதுவே முதல்முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


you may also like