Wednesday, October 7, 2026

மனிதப் புதைகுழிகளின் பெரும் கூடாரமாக செம்மணி: சர்வதேச நீதி வேண்டும் என்று சிறீதரன் எம்.பி. வலியுறுத்து


"செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குழந்தைகள், இளம்பெண்கள், இளைஞர்கள் ஆகியோருடையவை எனத் தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் எவற்றிலும் ஆடைகள் இருக்கவில்லை. அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டே புதைக்கப்பட்டிருக்கின்றனர். செம்மணிப் பிரதேசம் மனிதப் புதைகுழிகளின் பெரும் கூடாரமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த மனிதப் புதைகுழிகளுக்குச் சர்வதேச நீதி வேண்டும்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான 'அணையா விளக்கு' தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"பல தசாப்த காலமாக ஈழத்து மண்ணிலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வந்தார்கள். இங்கு இனப்படுகொலை இடம்பெற்றதற்கு ஆதாரமாகப் பல இடங்களில் மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் யாழ். செம்மணிப் பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்திலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குழந்தைகள், இளம்பெண்கள், இளைஞர்கள் ஆகியோருடையவை எனத் தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் எவற்றிலும் ஆடைகள் இருக்கவில்லை. அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டே புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

செம்மணிப் பிரதேசம் மனிதப் புதைகுழிகளின் பெரும் கூடாரமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த மனிதப் புதைகுழிகளுக்குச் சர்வதேச நீதி வேண்டும்."

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் வருகின்றபோது அவருக்கு செம்மணிப் புதைகுழி தொடர்பான உண்மையைத் தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு தரப்பினருடைய முயற்சியால் மேற்கொள்ளப்படும் இந்த 'அணையா விளக்கு' போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாம் ஒன்றுகூடியிருக்கின்றோம்.

எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை. தமிழ் மக்களுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் சிங்கள அரசுகளால் ஏமாற்றப்படுகின்றோம். இப்போது இருக்கின்ற அநுர அரசால்கூட தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றார்கள். இதுவரை காலமும் இருந்த அரசுகளுக்கு அநுர அரசும் சளைத்தது அல்ல என நிரூபிக்கும் வகையில் அரசின் அண்மைய நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இங்கு கண்டெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளுக்கான உரிய விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறும் இந்தப் போராட்டத்துக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குவேன். இந்தப் போராட்டத்துக்கு மக்களும் அணிதிரண்டு வந்து ஆதரவு வழங்க வேண்டும்." - என்றார்.


you may also like