- by Editor
- 6 months ago
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு விரைவில் முழு அதிகாரம் - ஜனாதிபதி
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய மலைநாட்டு சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்களை அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு பண்டாரவளை, பூனாகலை, கபரகலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க பல தசாப்தங்கள் தேவைப்படலாம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது இடம்பெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
இலங்கையின் இதயம் என வர்ணிக்கப்படும் மத்திய மலைநாடு தற்போது கண்முன்னே அழிந்து வருவதாகவும், மலைச்சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்து போதல் போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“நமது நாட்டின் எதிர்காலத்தின் முக்கிய பகுதி மத்திய மலைநாட்டிலேயே தங்கியுள்ளது. எனவே, எதிர்காலத்திற்காக மத்திய மலைநாட்டு சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது சில வீடுகளை இழக்க நேரிடலாம் என்றும், சில சாகுபடி நிலங்கள் மீண்டும் காடுகளாக மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய பேரழிவைத் தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் எனக் கூறினார்.
மலையக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
இதேவேளை, மலையக மக்கள் நாட்டில் ஏனைய மக்களுடன் சம உரிமையுடன் வாழ்வதற்கான உரிமையையும் வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தோட்ட நிறுவனங்களுடனான தற்போதைய ஒப்பந்தங்கள் 2042ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், எதிர்கால ஒப்பந்தங்களில் மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தோட்டங்களில் பணியாற்றும் மக்களுக்கு காணி வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை
மலையக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, வீடமைப்பு, வருமானம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நிலையான வருமான வழிகள் அவசியம் எனவும், ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், அது போதுமானதாக இல்லாவிட்டாலும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மலையக மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு கல்வியே முக்கியமான காரணியாகும் எனத் தெரிவித்த அவர், தலைமுறைகள் கடந்தும் ஒரே வாழ்க்கைச் சூழலுக்குள் சிக்கியிருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் மலையக மக்களிடையே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மக்கள் போதிய கவனிப்பின்றி வாழ்ந்ததன் விளைவாகவே இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், யுத்த காலத்தில் இலங்கையை விட்டு இந்தியாவுக்குச் சென்ற மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கும் அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.