Saturday, October 10, 2026

மத்திய கிழக்கு பதற்றம் - உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாவதற்கான எச்சரிக்கை


மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் அபாயம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாகவே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் முக்கியப் பகுதியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளமை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவிலான கடுமையான இடையூறை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகவுள்ள “உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்” (World Economic Outlook) அறிக்கையின் மூலம், பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த விரிவான கணிப்புகளை சர்வதேச நாணய நிதியம் வெளியிட உள்ளது.

போர் காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் இணைந்து, உலக பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் குறைக்கக்கூடும் என நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, போர் நிலைமை உருவாகாதிருந்தால், பெருந்தொற்றுக்குப் பின்னர் மீண்டு வந்த உலக பொருளாதாரம் 2026ஆம் ஆண்டில் 3.3% மற்றும் 2027ஆம் ஆண்டில் 3.2% வளர்ச்சி அடையும் என முன்பாக எதிர்பார்க்கப்பட்டதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

you may also like