Sunday, October 11, 2026

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் எச்சரிக்கை: பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது, இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்திற்கு 'மிக்ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் திகதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5 ஆம் திகதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீற்றர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை திங்கட்கிழமை ருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடசாலை , கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை பாடசாலை , கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பாடசாலை , கல்லூரிகளுக்கும் நாளை திங்கள்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

you may also like