Monday, October 12, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை


பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கமைய, சங்கத்தின் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில், நாளை முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்தவுள்ளனர்.

அத்துடன், அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிக்கும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறும் காலப்பகுதியில் வழங்கப்படாமல் இருக்கும் எந்தவொரு தரவும் பின்னர் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்படாது என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் தாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த விடயங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

you may also like