Tuesday, October 13, 2026

பூமிக்கு திரும்பினார் - இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா!


பூமிக்கு திரும்பினார் - இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா!

இந்தியாவின் விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் "அக்ஸியம்-4" விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘ட்ராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை (இலங்கை நேரப்படி) நேற்று (14) மாலை 4:45 மணிக்கு "அக்ஸியம்-4" குழுவினர் தொடங்கினர். சுமார் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட்டின் உதவியுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்கினர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில், பல்வேறு ஆய்வுகளை ’அக்ஸியம்-4’ குழுவினர் மேற்கொண்டனா். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, வெந்தயம், பச்சை பயறு விதைகளை விண்வெளியில் முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்துவரப்பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.இந்த விண்வெளிப் பயணத்தின்போது ’அக்ஸியம்-4’ குழுவினர் பூமியை 288 முறை சுற்றி வந்தனா். விண்வெளியில் சுமார் 122.31 இலட்சம் கி.மீ. பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுக்லா உள்பட 4 வீரா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னா், பூமியின் ஈா்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாட்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவா்கள் தங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

you may also like