Tuesday, October 13, 2026

சீனாவுடனான உறவை நிறுத்த சொல்லவில்லை இந்தியா என விஜித ஹேரத் தெரிவித்தார்.


"சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் இந்தியப் பயணம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"இந்தியப் பயணத்தின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் பற்றி பேசப்பட்டாலும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பூகோள அரசியல் போட்டியால் பிராந்தியப் பாதுகாப்புக்கு சிற்சில அச்சுறுத்தல்கள் உள்ளன. இது தொடர்பில் அவர் (இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) தரப்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது எமது நாட்டின் இறைமையைப் பாதுகாத்துக்கொண்டு, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என நாம் கூறினோம்.

எமது நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பை நாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டுப் பாதுகாப்புக்கு பிராந்தியப் பாதுகாப்பும் மிக முக்கியம். இந்த நிலைப்பாட்டில் இருந்தே நாம் செயற்படுவோம். சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நாமும் அது பற்றிப் பேசவில்லை. பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்ற விடயத்தைக் கூறினோம்." - என்றார்.

you may also like